வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஐ.ஏ.எஸ். ஆன அந்த நொடிப்பொழுது....

ட்ரிங்.... ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...
மாலை
நான்கரை மணி இருக்கும். அரைக்கால் தூக்கத்தில் இருந்த எனக்குத் தெளிவாக கேட்டது. புது தில்லியில் நேர்முகத் தேர்வை முடித்து விட்டு சென்னைக்கு வந்த பின்பு முதல் நிலைத் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த நேரம். இறுதிக் கட்ட முடிவுகள் எப்போதும் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
'ஹலோ!' அறைத் தோழன் பிரபு தனக்கு வந்த அழைப்பில் பேசத் தொடங்கினான்.
'என்னது.
.. ரிசல்ட் வந்துருச்சா?' மறுமுனையில் இருந்து பேசியவரிடம் நான் பேசாமலேயே அச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். ஒளியின் வேகத்தில் ஒரு பாம்பு மின்னலைப் போல அடி பாதத்தில் இருந்து குறுக்காக உடல் முழுதும் ஓடி உச்சந்தலையை அடைந்தது.
'
எப்போ?'
'
யார் யார் க்ளியர் பண்ணியிருக்காங்க?'
'
வீரபாண்டியன்... வீரபாண்டியன்... 'ரிசல்ட் வந்துருச்சு' ன்னு சொல்றாங்க வீரபாண்டியன்'.
'
ம்ம்.... இந்தா வர்றேன் பிரபு' பொறுமையாகத்தான் சொன்னேன். ஆனால் உடலெங்கும் மின்சாரம் பாய்ச்சியதைப் போல ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. ஏற்கனவே சூடு வாங்கிய அனுபவம் மீண்டும் தலை எட்டிப் பார்த்தது. பல நல்ல உள்ளங்களின் நன்கொடையாலும், பொன்மனங்களின் பொருளுதவியாலும் படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த பதற்றம் வர வேண்டும். ஆனால் இது மற்றவர்களுக்கு வழக்கமாக ஏற்படும் பயத்தால் தோன்றியதல்ல. இதற்கு வேறொரு தன்மையும், காரணமும் உண்டு.
 
'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'
என்னும் குறள் ஒன்று உண்டு. அதைப்போல அப்படி உதவி செய்தவர்களுக்கு திருப்பி 'நன்றிக்கடன் செலுத்துதல்' என்னும் விழுமியமும் நம் சமூகத்தில் போற்றத்தக்கது. எப்போது என்னுடைய கல்விக்காக நான் கேட்காமலேயே உதவிகள் என்னைத் தேடி வந்ததோ, அப்போதிருந்து அதன் பொருளை நன்கு உள்வாங்கியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் எந்த நோக்கத்திற்காக எனக்கு உதவிகள் தரப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைந்து காட்டுவதுதான் நான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் என்று நம்புகிறேன். தனக்கு உகநத்ததாக காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக சாமிக்கு நேர்ந்து கொண்டு, தானாக நிறைவேறும் என்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் பலனை எதிர்பார்க்கும் பக்தனைப் போல இருக்கக் கூடாது. தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைவதில் தீவிரம் காட்ட வேண்டும். நான் ஐ ஏ எஸ் அதிகாரியாக வேண்டும் என்னும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவ்வாறான தீவிரத்தையும், கடும் உழைப்பையும் செலுத்த என்றும் தவறியதில்லை. அந்த லட்சிய வேட்கையும், நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்னும் உந்துதலும் தந்த பதற்றமே இந்த நேரத்தில் என்னில் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. இதைத்தான் 'இதற்கு வேறொரு தன்மையும், காரணமும் உண்டு' என்றேன். 

அவ்வுணர்வோடு பாயை விட்டு எழுந்து பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தேன். சிறிது நேரம் எந்த நினைவுகளுமன்றி மனதை வெறுமையாய் ஆக்கிக் கொண்டேன். எந்த உணர்வுகளுக்குள்ளும் சிக்காமல் அப்படியே இருந்து விட்டால் நன்றாகத்தானிருக்கிறது. வெறுமையாக இருப்பது எவ்வளவு சுகமானது என்று எனக்குத் தெரியும். பொருளாதாரச் சிக்கல்களால் மனம் தனக்குள்ளேயே யாரும் அறியாமல் வெம்பி வெதும்பும் போது, அதிலிருந்து விடுபட்டு உணர்வுகளற்ற நிலைக்குத் தாவுகிற வித்தையை எங்கு கற்றேன் என்று தெரியவில்லை. மனிதனை அவன் வாழுகிற காலமும், சமூகச் சூழலும் வார்த்தெடுக்கிறது என்பது உண்மையே. என்னுடைய வாழ்க்கைச் சூழல் 'வெறுமைக்குத் தாவுதல்' எனும் கலையை கற்றுக் கொடுத்திருக்கலாம். அப்படி ஒரு சமமான, வெறுமையான மனநிலையில் சில நொடிகளுக்கு மேல் இருக்க முடிவதில்லை. ஆனால், அந்த நொடிப் பொழுதுகள் என் வாழ்க்கைக் காலம் முழுவதும் எத்தனை பெரிய துன்பங்களையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து செல்வதற்கான ஊக்கத்தைத் தரக் கூடியது. அரசு அலுவலகங்களில் தேங்கி, நிரம்பி வழியும் கோப்புகளைப் போல என் மனதில் ஒன்றன் மீது ஒன்றாக சேர்ந்து தேங்கிக் கிடக்கும் அத்தனைக் கவலைகளையும், சோர்வுகளையும் அந்த வெறுமையான மனநிலை நொடிப் பொழுதுகளில் அழித்து விடும் மாயம்தான் என்ன! மணலில் எழுதி வைத்ததை அதன் சுவடுகளே தெரியாமல் அழித்து விட்டுச் செல்லும் கடலலையைப் போல வந்து அழித்து விட்டுச் சென்றது. ஆனால் இந்த நிலை எப்போதும் வாய்ப்பதில்லை. பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போல எப்போதாவது வந்து, மனதில் படிந்து உறைந்து கிடக்கும் ரணங்களின் சூட்டைத் தணித்து விட்டுச் செல்லும். எனக்கு நினைவு தெரிந்து இரண்டு மூன்று முறை இப்படி உணர்ந்திருக்கிறேன்.

ஆனால் இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த நிமிடத்தில், இந்த நொடிப்பொழுதில் நான் உணர்ந்த 'வெறுமை' என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. சில நொடிப்பொழுதுகள் தங்கியிருந்த அந்த குறிப்பிட்ட 'வெறுமை மனநிலை' அடுத்த சில நொடிப்பொழுதுகளில் என் காதுகளுக்கு வந்து சேரப் போகும் செய்தியால் இன்றைக்கு முக்கியமாகப் படுகிறது.
'
என்ன வீரபாண்டியன், ரிசல்ட் பாக்கப் போகலாம்ல' என்று சிவநாதன் சொன்ன போது, மீண்டும் மின்சாரம் பாய்ச்சிய உடல் சேரில் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தேன். முகத்தைக் கழுவி விட்டு 'synergy institute'க்குப் போகலாம் என நினைத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றேன். இந்த உடலில் தண்ணீர் பட்டும் ஏதும் ஆகவில்லை. வழிந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த பொழுது, என் செல்போனில் மணி அடித்தது. மெதுவாகப் போய் எடுத்தேன். நண்பர் பி.பி.டி ரமேசின் எண்ணைப் பார்த்தப் பிறகு செல்போனைக் காதில் வைத்தேன்.
'
வணக்கம் சார்!'
'
என்ன வீரபாண்டியன் ரிசல்ட் பாத்திங்களா?'
'
இன்னும் பாக்கலை சார்'
'
அட என்னது... வாழ்த்துக்கள் வீரபாண்டியன்... நீங்க க்ளியர் பண்ணிட்டீங்க. வாழ்த்துக்கள்... '
'
சார் நெசமாத்தான் சொல்றீங்களா?' ரமேசின் வார்த்தைகள் நீண்ட காலம் ஒருதலைப் பட்சமாக உருகி உருகிக் காதலிக்கும் காதலனிடம் தான் ஏங்கித் தவிக்கும் காதலியே நேரில் வந்து தன்னுடைய காதலைச் சொல்லியது போல இருந்தது . இந்த கணம் கூட அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு என் செவிகளில் மிகத் தெளிவாக எதிரொலிக்கிறது. அவருடைய தெளிவான வார்த்தைகள் என் உடலை, உள்ளத்தை, சிந்தனையை ஒரு புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு உள்ளிழுத்துச் சென்று சில நொடிப்பொழுதுகளைத் தெளிவற்றதாக மாற்றிப் போட்டது.
'
அட உண்மையிலேயே வீரபாண்டியன். சிபியும் க்ளியர் பண்ணிட்டான்'
'
ரொம்ப நன்றி சார். நானும் ரிசல்ட் பாக்கத்தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன். ரொம்ப நன்றி சார்'
முகம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்த படி வந்த அறைத் தோழர்கள் பிரபுவும், சிவநாதனும் 'என்ன வீரபாண்டியன், க்ளியர் ஆயிடுச்சா?' எனக் கேட்டனர்.


'ஆங்... க்ளியர் ஆயிடுச்சாம் பிரபு' சொன்ன மறுநொடி எங்கள் உடல் ஒன்றோடொன்று தழுவிக் கொண்டது. மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்கு சரியான உடல்மொழி அதுவாகத்தானிருக்க முடியும். சிவாவோடும் அதே தழுவல். அதே பரிமாற்றம்.
'என்ன ரேங்க் வீரபாண்டியன்' இது சிவா.
'அத கேக்கல சிவா. ரிசல்ட் வந்துருச்சுன்னு மட்டும்தான் சொன்னார். ரேங்க் எதுவும் சொல்லல. நானே போய் பாத்துட்டு வந்துடுறேன்'
'சீக்கிரம் போயிட்டு வாங்க... ட்ரீட்ட ஆரம்பிச்சுடலாம்'
நடந்து கொண்டிருந்த போது
சிபியிடம் இருந்து அழைப்பு மணி வந்தது.
'என்னப்பா தம்பி. ரிசல்ட் பாத்தியா?'
'அதுக்குத்தான்ப்பா போய்கிட்டு இருக்கேன். ஆமா, ஒன்னோட ரேங்க் என்ன'
'என்னோட ரேங்க் விடு. ஒன்னோட ரேங்க் என்ன தெரியுமா?'
'இன்னும் தெரியலப்பா. அதப் பாக்கத்தான்
போய்கிட்டு இருக்கேன்'
' உறுதியா ஐ ஏ எஸ் தான். 53 வது ரேங்க்பா நீ. தம்பி சொன்ன மாதிரியே 'ஹோம் காடர்' ஐ ஏ எஸ் வாங்கிட்டியேப்பா' .



ஹெர்குலஸ் தான் பன்னெடுங்காலமாக சுமந்து வந்த பூமி உருண்டையைக் கீழே போட்டு விட்டு நிரந்தரமான ஓய்வு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அப்பூமி உருண்டையை எட்டி உதைத்து விளையாடியதைப் போல் என் மனம் விளையாட ஆரம்பித்தது. ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி குகைக்குள் நுழைந்து கூண்டுக்குள் இருந்த கிளியைப் பிடித்து, அதை ரத்தம் சிந்த வைத்து கொடூரமான அரக்கனைக் கொன்று, அவன் பிடியில் இருந்த மக்களை விடுதலை செய்த ஒரு மாவீரன் விட்ட நிம்மதிப் பெருமூச்சை ஒத்திருந்தது என் அந்த கணத்து மூச்சுக் காற்று.

இருநூறு அடி தாண்டியிருப்பேன். என்னைக் கேட்டால் இந்த இருநூறு அடி நடைக்குள் மனதில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் முக்கியம் என்பேன். சாலைகளில் என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் எப்போதும் போலவே ஹார்ன் ஒலி எழுப்பி என்னைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஒரு வெற்றித் திருமகன் வருகிறான் என்று எவரும் பாடல் படவில்லை. என் உருவத்தை தன் கண் பாவைக்குள் பதித்துக் கொண்டாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நகர்ந்து கொண்டே சென்றனர் மனிதர்கள். வேகத்தில் இடிப்பதைப் போல சென்ற என்னைத் திட்டி விட்டுப் போயினர் இருவர். ஒரு யுகக் கனவை நனவாக்கிய நாயகன் நடந்து வருகிறான் என்று எவரும் வழியெங்கும் பூ தூவவில்லை. ஹெர்குலஸ் எட்டி உதைத்து விளையாடிய பூமி உருண்டை திடீரென மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது. அதில் சாதாரண மிகச் சிறு மனிதப் பூச்சி நான் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அரக்கனைக் கொன்ற மாவீரனைப் போன்ற பெருமூச்சின் வெப்பமும், அடர்த்தியும், வேகமும் குறைந்து விட்டது. சிந்துபாத்தின் கண் முன் விரிந்து கொண்டே செல்லும் முடிவற்ற தொடர்கதையைப் போல, என் கண்களுக்கு இந்த உலகம் தென்பட்டது.

14 கருத்துகள்:

கண்ணகி சொன்னது…

சார் உங்கள் மனநிலையையும் உழைப்பையும் அடைந்த துன்பங்களும் உங்களுக்குத்தான் தெரியும்...

மீடியாகாளில் வந்த்து மட்டும்தான் எங்களுக்குத்தெரியும்..

எதுவாயினும் நீங்கள் ஒரு முன் உதாரணம்....என் மகனிடம் அடிககடி உங்களைப்பற்றி சொல்லுவேன்..சார்...

Bruno சொன்னது…

//அரசு அலுவலகங்களில் தேங்கி, நிரம்பி வழியும் கோப்புகளைப் போல //

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மின் ஆளுமை கொண்டு வாருங்கள்

கோப்புகள் தேங்காத அரசு நிர்வாகத்தை நோக்கி பயணிப்போம்

Bruno சொன்னது…

//ஹெர்குலஸ் தான் பன்னெடுங்காலமாக சுமந்து வந்த பூமி உருண்டையைக் கீழே போட்டு விட்டு நிரந்தரமான ஓய்வு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அப்பூமி உருண்டையை எட்டி உதைத்து விளையாடியதைப் போல் என் மனம் விளையாட ஆரம்பித்தது.//

சூப்பர்

ஆனால் இப்ப உங்க நிலை (அரசு நிர்வாகத்தை சுமக்கும் பொறுப்புடன்) அட்லஸ் ஆகி விட்டதே


// ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி குகைக்குள் நுழைந்து கூண்டுக்குள் இருந்த கிளியைப் பிடித்து, அதை ரத்தம் சிந்த வைத்து கொடூரமான அரக்கனைக் கொன்று, அவன் பிடியில் இருந்த மக்களை விடுதலை செய்த ஒரு மாவீரன் விட்ட நிம்மதிப் பெருமூச்சை ஒத்திருந்தது என் அந்த கணத்து மூச்சுக் காற்று.//

:) :)

Kavin Malar சொன்னது…

Hats off to you!!

Loggy : லோகி சொன்னது…

nanbaa mikka magilachi. un eluthu nadai arputham!
un training anubavagaliayum inge terivithaal nanraaga irukkum.

ஊர்சுத்தி... சொன்னது…

வெறுமையான மன நிலை வேண்டும் என நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த மன நிலைக்குச் செல்லும் வரம் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள். அதை தக்க வைத்துக் கொள்ளுங்கள் வீரபாண்டியன். வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி கவலைப் படாத பக்குவும் உங்கள் முன் நீண்டு கிடக்கும் இந்த உலகத்தின் கரடு முரடான பாதைகளில் வழி நடத்திச் செல்லும். நன்றிக்குரியவர்களை நன்றியுடன் நினைக்கும் உங்களின் ஆன்மாவிற்கு வணக்கங்களும் அன்பும்.

Unknown சொன்னது…

I was delighted and mute when I was reading the below mentioned lines.

All the best வீரபாண்டி.

'என்ன வீரபாண்டியன் ரிசல்ட் பாத்திங்களா?'
'இன்னும் பாக்கலை சார்'
'அட என்னது... வாழ்த்துக்கள் வீரபாண்டியன்... நீங்க க்ளியர் பண்ணிட்டீங்க. வாழ்த்துக்கள்...

ganesan சொன்னது…

நீண்ட காலத்துக்குப் பிறகு பல புதிய பாடங்கள் படிக்கவேண்டியிருக்கிறது உங்களிடமிருந்துஉண்மை அனுபவத்தை
உரக்கச் சொல்பவர் மகான்தான் தமிழ்ச்செல்வன் உங்களை சரியாகவே சொன்னார் மகான் என்று.எழுத்து நடை மிக
அருமை.அனுபவ உணர்ச்சியின் வெளிப்பாடு அப்படித்தான் இருக்கும்.தொடர்க!வெல்க! நன்றி. க.கணேசன் குமரி.

ajayan bala baskaran சொன்னது…

நலமா ? பயிற்சிக்காலம் முடிந்ததா? மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் ..
அஜயன்பாலா

Unknown சொன்னது…

/// ஹெர்குலஸ் எட்டி உதைத்து விளையாடிய பூமி உருண்டை திடீரென மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது. அதில் சாதாரண மிகச் சிறு மனிதப் பூச்சி நான் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அரக்கனைக் கொன்ற மாவீரனைப் போன்ற பெருமூச்சின் வெப்பமும், அடர்த்தியும், வேகமும் குறைந்து விட்டது. சிந்துபாத்தின் கண் முன் விரிந்து கொண்டே செல்லும் முடிவற்ற தொடர்கதையைப் போல, என் கண்களுக்கு இந்த உலகம் தென்பட்டது.////

அதுதான் உண்மை நண்பரே.

reka சொன்னது…

மிக அருமையான பதிவு. இதை போல எத்தனை பேர்களுக்கு மிக தைரியமாக உண்மையை உரக்க சொல்ல தெரியும். தங்களின் அனுபவங்களை, தாங்கள் பெற்ற வெற்றி படிக்கட்டுகளை அடைய, எடுத்துக்கொண்ட முயற்சிகளை, தங்களின் ஆலோசனைகளை, தங்களை போன்ற பல வீரபாண்டியங்களை,உருவாக்கிட, தாங்கள் அவசியம் எங்களுடைய Qatar நாட்டிற்கு வருகை தந்து நம்முடைய தமிழ் மாணவர்களுக்கு நல்லதொரு உந்துதலை வழங்கிட வேண்டுமாய் தாழ்மையுடன் அன்புடன் கேட்டுக்கொள்ளும் நான், நம் தமிழ் மக்களில் இருந்து, நம் பாரத இந்திய தேசத்தின் உயர்வுக்கு, தங்களை போன்ற பங்களிப்பிற்கும் வாய்ப்பை பெற்று தர தாங்களின் மேலான பதிலையும் வரவையும் ஆவலோடு காத்திருக்கும் அன்பன் ஆர். காளீஸ்வரன் தோகா, கத்தார்.
rkalees@gmail.com
rkalees@facebook.com

reka சொன்னது…

மிக அருமையான பதிவு. இதை போல எத்தனை பேர்களுக்கு மிக தைரியமாக உண்மையை உரக்க சொல்ல தெரியும். தங்களின் அனுபவங்களை, தாங்கள் பெற்ற வெற்றி படிக்கட்டுகளை அடைய, எடுத்துக்கொண்ட முயற்சிகளை, தங்களின் ஆலோசனைகளை, தங்களை போன்ற பல வீரபாண்டியங்களை,உருவாக்கிட, தாங்கள் அவசியம் எங்களுடைய Qatar நாட்டிற்கு வருகை தந்து நம்முடைய தமிழ் மாணவர்களுக்கு நல்லதொரு உந்துதலை வழங்கிட வேண்டுமாய் தாழ்மையுடன் அன்புடன் கேட்டுக்கொள்ளும் நான், நம் தமிழ் மக்களில் இருந்து, நம் பாரத இந்திய தேசத்தின் உயர்வுக்கு, தங்களை போன்ற பங்களிப்பிற்கும் வாய்ப்பை பெற்று தர தாங்களின் மேலான பதிலையும் வரவையும் ஆவலோடு காத்திருக்கும் அன்பன் ஆர். காளீஸ்வரன் தோகா, கத்தார்.

Unknown சொன்னது…

hai சார் IAS தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த வலைதளத்தின் மூலம் ஆலோசனை வழங்கினால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

Unknown சொன்னது…

hai சார் IAS தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த வலைதளத்தின் மூலம் ஆலோசனை வழங்கினால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.