சனி, 28 ஜனவரி, 2012

இப்படிக்கு, தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்

இந்த நினைவுக் குறிப்பை (கட்டுரையை) கடந்த ஆசிரியர் தினத்தையொட்டி எழுதினேன். குறிப்பாக அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களைப் பற்றியதாக இருந்தாலும், எனக்குப் பிடித்தமான ஆசிரியர்களின் பண்புகளை எடுத்துரைப்பதன் வாயிலாக மாணவர்களுக்குப் பிடித்தமான, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு விருப்பமான முறையில் பாடங்களை நடத்துவது மட்டுமல்லாது அவர்களின் தனி மனிதப் பண்புகளை வளர்த்தெடுப்பவர்களாகவும், உயர்ந்த இலட்சியங்களோடு அவர்களை உருவாக்குபவர்களாகவும் உள்ள ஆசிரியர்களின் தன்மைகளை இக்கட்டுரை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன். நம் கல்வித் திட்டத்தைப் பற்றிய விமர்சனத்தில் முக்கியமானது, கல்வி கற்றல் முறை, மாணவர் திறன் வளர்ப்பு மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவு முறைகளை மறுசீராய்வு செய்வதாகும். அதையொட்டி, nostalgia பார்வையில், ஆசிரியர்களுக்குரிய பொதுவான குணாதிசியங்களை விமர்சன முறையில் இங்கு பட்டியலிட்டு இருக்கிறேன். மேலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆசிரியர்களின் கடமையையும் சுட்டிக் காட்டியிருப்பதாக எண்ணுகிறேன். 






  இப்படிக்கு, 
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்



ஆசிரியர் தினத்தில் என் மனதில் உருண்டோடிய, எனக்குக் கற்றுக் கொடுத்த பேராசான்களைப் பற்றிய ஞாபகக் குறிப்புகள்...  



என் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் மாலை நேரத்து அந்தியாய் என் மனதை வண்ணங்களால் பூசியிருக்கிறது. அவர்களை நினைக்கும் அந்த தருணம் மழைக்காலத்தில் தோன்றும் வானவில்லைப் போல வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. சிறு பிராயத்திலிருந்து எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் வேறுவேறான பிம்பங்களாய் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒருவிதம். மாணவர்களை வசீகரிப்பதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி உத்திகள் உண்டு. வெவ்வேறான சூழலிருந்து வரும் எல்லோரையும் வகுப்பறையில் ஒரே சூழலுக்குள் கொண்டு வரும் பணி அவர்களுடையது. பாடம் சொல்லித் தரும் நேரங்களில் அனைவரையும் ஒரே மனநிலைக்குள் இழுத்து வர அவர்கள் கையாளும் வழிமுறைகள் ஏராளம். காற்றடித்து மணல் பறந்தாலும் குலையாத பாலைவனங்களின் மணற்கோடுகள் மாதிரி அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் நீண்டு கிடக்கின்றன.


இன்றைக்கும் என் ஒன்றாம் வகுப்பின் ஆசிரியர் சுசீலா டீச்சர், இரண்டாம் வகுப்பின் ரஞ்சிதா டீச்சர் எப்படி பாடம் நடத்துவார்கள் என்பது என் கண்  முன்னால் நிழலாடுகிறது. மூன்றாம் வகுப்பில் எங்களை மகிழ்வித்த ராஜசேகர் சாரின் விளையாட்டுக்களை எங்களால் மறக்க முடியாது. போலீஸ்காரரைப் போல பெரிய மீசை வைத்துக் கொண்டு  அடிக்கமாலேயே எங்களைப் பயமுறுத்துவதையும், இரண்டு காதுகளையும் கொத்தாகப் பிடித்து தூக்குவதையும் நினைக்க நினைக்க இப்போதும் மனது குதூகலம் அடைகிறது. போலீஸ் வேலையை உதறி விட்டு ஆசிரியர் வேலைக்கு வந்தததாக எங்களுக்குள் நாங்களே புரளியைக் கிளப்பி விட்டு, அதை உண்மை என்று மனதார நம்பினோம். இப்படி பல புரளிகளைக் கிளப்பி விடுவதும், அதை உண்மை என்று எங்களுக்குள் தலையில் அடித்து சத்தியம் செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.


இந்த ஆசிரியர் தினத்தில், அவர்களை நினைவுகூரும் போது பிரம்புகளோடும், ரூல் தடியோடும் சிலர் வந்து போகிறார்கள். அவர்களை எவ்வளவு வசை பாட முடியுமோ அவ்வளவு வசை பாடியிருக்கிறோம். எங்களுடைய எல்லா சாபத்திற்கும் பலிகடா ஆவதிலிருந்து அத்தகைய எந்த ஆசிரியரும் தவறியதில்லை. அவர்களின் சைக்கிள் டயர்களில் காற்றைப் பிடுங்கி விடுவது, இருக்கையில் களிமண்ணைத் தடவி விடுவது, 'டீ' யில் எச்சில் துப்பி வைப்பது என அவர்களைப் பழி வாங்குவதில் வெற்றி கண்டிருக்கிறோம். ஆனால், சில ஆசிரியர்களின் மீது மட்டும் அன்பும், மரியாதையும் அளவற்று சுரக்கும். அவர்கள் செல்லமாக கன்னத்தைக் கிள்ளிய இடம் இன்றும் சுகம் தருகிறது. என்னுடைய சேட்டைகளில் திடீரென கோபமடைந்து அவர்கள் பிடித்துத் திருகிய காதையும், வயிற்றையும் இச்சமயம் தொட்டுப் பார்த்தால் கூசுகிறது. அவர்களை யாரவது திட்டினாலோ, சாபமிட்டாலோ எனக்கு பொல்லாத கோபம் வந்திருக்கிறது.


அந்த வரிசையில் வரும் நான்காம் வகுப்பு ஆசிரியர் பிரேமா டீச்சர், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நாகஜோதி டீச்சர் இன்றைக்கும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வரும் போது, அவர்களோடு நட்பு பாராட்ட போட்டி போடுவோம். எல்லா விளையாட்டுக்களிலும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதில் பெருமிதம் கொள்வோம். அவர்கள் எது செய்தாலும் ஆர்வத்தோடு கவனிப்பதற்கும், என்ன சொன்னாலும் கேட்பதற்கும் ஒரு கூட்டம் தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும். இன்றைக்கும் அவர்களோடு பேசும் போது நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பின்னும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பார்கள். தேவதைகளும், தேவதூதர்களும் சூழ, கழிந்த என் குழந்தைப் பருவம் இனிமையான முறையில் அமைந்திடக் காரணமானவர்களோடு ஐ.ஏ.எஸ். அதிகாரியான பின்னும் தொடர்பில் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறதென்று நான் சொல்லுவேன்.




ஒரு மாணவன் பள்ளியில் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியையும், எவ்வளவு மகிழ்ச்சிகரமாக ஆக்க முடியுமோ அதை மிக எளிதாக நடத்திக் காட்டும் ஒரு ஆன்மா திருமலை சார். கல்வித்திட்டம், பாடத்திட்டம், பள்ளி விதிமுறைகள், நடைமுறைகள், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பு என்று எதுவெல்லாம் மாணவர்களின் மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்கிறதோ அதை அனைத்தையும் துச்சமென நினைத்து தூக்கி எறிந்து விட்டு, மாணவர்கள் விரும்பும்படி கதைகள் மட்டுமே சொல்லுவார். அவர் வரலாறு, புவியியல் என எந்த பாடம் எடுத்தாலும் வகுப்பில் சிரிப்பு சத்தம் அடங்கவே அடங்காது. அனைவரது மனமும் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தோடும். மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்து அதிலேயே லயித்திருக்கும் வாய்ப்பு அவருடைய வகுப்புகளில் மட்டுமே கிடைக்கக் கூடியது. ஒரு மனிதனின் முகம் அவ்வளவு பிரகாசத்தை அடையக்கூடியதா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் தோன்றும். அவர் மட்டுமே இத்தனையையும் செய்து காட்டக்கூடிய பெரும் வல்லமை பொருந்தியவர். தேவையில்லாமல் மாணவர்களை தொல்லைகளுக்கு உள்ளாகும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களோடு மல்லுக் கட்டி, சண்டை போட்டு, அனைவரிடமும் பகை வளர்த்துக் கொள்பவர். என்னுடைய உயர்நிலைக் கல்வியைத் தித்திக்கும் பாகாக்கியவர்.


ஒரு சிற்பியைப் போல தேவையல்லாதவற்றை நீக்கி, அவசியமான இடங்களில் எல்லாம் உளியடித்து என்னை ஊர் பாராட்டும் சிற்பமாக்கிய அன்புச்செல்வன் சாரைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். என்னுடைய மேல்நிலைக் கல்வியில் சிறப்பானதொரு வெற்றியை அடைவதற்கும், வாழ்க்கையில் நல்லதொரு நிலையை எட்டுவதற்கும் காரணகர்த்தவானவர். ரொம்பவும் அமைதியான சுபாவம் என்றும் சொல்வதற்கில்லை; ஆனால் அர்த்தமிழந்த வார்த்தைகளைத் துணைக்கு எடுத்துக் கொண்டும் பேச மாட்டார்;  கண்டிப்பானவர்; ஆனால் எடுத்ததெற்கெல்லாம் பின்னி எடுக்கிற 'பயில்வான்' வாத்தியார் இல்லை. மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டுமென முடிவெடுத்து அதற்கான பயணத்தில் தளராமல் நடை போட்டவர். மாநகராட்சிப் பள்ளியிலிருந்து மாநில அளவில் மதிப்பெண்கள் பெற எண்ணுவதை இளக்காரமாகப் பார்ப்பதுதான் யதார்த்தம். ஆனால், தன்னுடைய மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று திடமாக நம்பியவர். எங்களைக் கல்வியில் சாதிக்க வைப்பதற்கு எங்களை விட கடுமையாக உழைத்தவர். அதனை என் மூலம் நிறைவேற்றிக் காட்டிய போராளி. இவ்வாறே, என்னுடைய பள்ளிக்காலத்தில் பலவற்றை என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்று வந்திருக்கிறேன். சில ஆசிரியர்களிடம் சில குணங்கள் பிடித்திருந்தன. மற்ற சிலரிடம் மற்ற சில பண்புகள் விருப்பமாய் இருந்தன. எனக்குப் பிடித்த அனைத்து குணநலன்களோடும் எல்லா ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று சிறு வயதில் எத்தனையோ முறை கனவு கண்டிருக்கிறேன், அது ஒருபோதும் நிறைவேறியதில்லை. உலகத்தில் இருக்கும் எதுவும் எந்த குறைகளுமற்ற, எல்லாமும் நிறைந்த முழுமையோடு இருப்பது சாத்தியமில்லை என்பதைக் காலம் செல்லச் செல்ல புரிந்து கொண்டேன்.




என்னுடைய பள்ளிக்காலம் முழுவதும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கழிந்தது. என்னோடு படித்த பெரும்பாலான மாணவர்கள் நான் உட்பட கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள்தான். நான் படித்த ஆரம்பப் பள்ளி வீட்டிற்கு அருகாமையில் எங்களுடைய சேரியை ஒட்டியே இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்தாலும் இருட்டும் வரை விளையாடி விட்டுத்தான் போவோம். என்னுடைய அம்மா அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு மாலை ஆறரை மணிக்குத்தான் வீடு திரும்புவார். வந்ததும் எங்களின் பசியாற்றுவதற்கு சமைக்கத் தொடங்கி விடுவார். நாங்கள் பள்ளியில் என்ன படித்தோம்; ஆசிரியர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்கள்; வீட்டுப்பாடம் எதுவும் செய்ய வேண்டியிருக்கிறதா; தேர்வு எதுவும் வருகிறதா; அதற்கு எதுவும் படிக்க வேண்டுமா என்று எந்த கேள்வியும் கேட்டதில்லை. காரணம், படிக்கிற குழந்தைகளிடம் இதை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாது. என்னுடைய தந்தை வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் செய்கிறவர். மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். 'படிச்சு பெரிய ஆளா வரணும்' என்கிற தினசரி அறிவுரையைத் தவிர அவரும் இதைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. (எனினும், படித்த பெற்றோர்களை விட அவர்கள் நிறைய நற்பண்புகளை எங்களுக்கு  போதித்திருக்கிறார்கள்)


இப்படித்தான் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் யாரும் கட்டணம் செலுத்தி மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வதில்லை. பாரதியார் பாடியதைப் போல மாலையில் ஓயாமல் ஓடி விளையாடிக் கொண்டிருப்போம். இந்த பெற்றோர்கள் அனைவரும் பறவைகள் இரை தேடிச் செல்வதைப் போல காலை எழுந்தவுடன் சென்று வானம் தன்னை இருளால் மூடிக் கொள்கிற இராப்பொழுது வீடு வந்து சேர்வார்கள். தங்கள் உடலை தாங்களே முறுக்கிப் பிழிந்து சாறு எடுத்து முதலாளிகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும், சூப்பர்வைசர்களுக்கும் கொடுத்து விட்டு சோர்ந்து போய் வருவார்கள். வந்து சேர்ந்ததும் சமைப்பதும், பரிமாறுவதும், சுற்றத்தாருடன் சற்று நேரம் உரையாடுவதும், உறங்குவதும், உறங்கி எழுந்து அடுத்த நாள் அதே பணியைத் தொடர்வதுமாக இவர்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் சுழற்சியால் ஏற்பட்ட சோர்வும், கங்காணிகள், மேஸ்திரிகளின் கண்காணிப்பில் வளர்ந்த வெறுப்பும் இவர்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதில் அக்கறை கொள்ளாமல் செய்திருக்கலாம்.


இந்நிலையில், இந்த குழந்தைகள் எதாவது விசயங்களைக் கற்கிறார்கள் என்றால் அது பள்ளிக்கூடத்தில்தான்; அதுவும் ஆசிரியர்களிடத்தில்தான். ஒரு மாணவரின் வாழ்க்கையை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்கை நாம் வகிக்கிறோம் என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட்டார்களா என்று அவ்வளவு எளிதில் என்னால் சொல்லி விட முடியவில்லை. ஆனால், கடலுக்கு நீல நிறத்தை அளிக்கும் வானத்தைப் போல ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் எதிரொலிப்பு எப்போதும் இருக்கிறது.


ஆசிரியர்கள் அறியாமல் ஒவ்வொரு மாணவரும் அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். அவர்களுடைய செயல்களைக் கூர்ந்து நோக்குகிறார்கள். ஆசிரியர்கள் பேசுகிற முறை, நடக்கிற நடை, சிரிக்கும் விதம், கோபம் கொள்ளும் பாங்கு என அத்தனை உணர்சிகளையும் கற்கிறார்கள். பல பேரின் கையெழுத்து நடை அவர்களின் ஆசிரியர்களின் கையெழுத்து நடையோடு ஒத்திருப்பது கூட இந்த 'கூர்ந்து நோக்குதலினால்' ஏற்படுவதேயாகும். பெற்றோர், உடன்பிறந்தார், சுற்றத்தார் என அனைவரிடமிருந்தும் நிறைய விசயங்களைத் தருவித்துக் கொண்டாலும், ஆசிரியரிடமிருந்து உள்வாங்கிக் கொள்வதுதான் அதிகமாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம், படிக்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய ஆசிரியர்களே எல்லாரைக் காட்டிலும் புத்திசாலி; திறமைகள் நிரம்பியவர். நாட்கள் நகர நகர அவர்களுடைய எண்ணம், மதிப்பீடு மாறலாம். ஆனால் அவர்கள் மீதான பிரமிப்பும், மரியாதையும் எப்போதும் குறையாது. இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி இதுதான், ஆசிரிய வர்க்கத்தில் அடங்கிய எல்லா ஆசிரியர்களும் இதைப் புரிந்து கொண்டு  நல்ல குழந்தைகளை,  மனிதர்களை உருவாக்குவதில் சுய உணர்வோடும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்கிறார்களா?

5 கருத்துகள்:

Ganesan kandan சொன்னது…

இப்படிக்கு' கட்டுரை ஏராளமான பேரின் சிந்தனையை கிளரும்.எனது வாழ்க்கையின் பள்ளிப் பருவ ஆசிரியர்களின் மகோன்னதம் இப்படித்தான் ஆசிரியர் வேதநாயகம் இல்லையேல் கணேசன் இன்று எங்காவது இளவு வீடுகளில் தப்படித்துக் கொண்டிருப்பான்.பேராசிரியாக வந்திருப்பது கடினமே.நினைவைக் கிளருகிறது.

Franklin சொன்னது…

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்தலின் போது, அன்றைய தினம் முழுமையுமே மகிழ்வைத் தருகின்றன.கடந்த காலங்களை தற்போது ஒப்பிடும் போது,ஆசிரியர்களின் மனநிலையில் பல மாறுதல்களை உணரமுடிகின்றன.சுயநலம் தாண்டிய பொதுநலனே “நல்ல”
மனிதர்களை உருவாக்குகிறது.

anandan_Chennimalai சொன்னது…

நினைவுக் குளத்தில் கல்லெறிந்தது உங்கள் கட்டுரை ...என்னை வடிவாக்கிய நாமகிரி டீச்சர், காந்திமதி டீச்சர், சுப்பிரமணியாசிரியர், பழனிசாமி சார், மீசைப் பழனிச்சாமி சார், VRS சார், மனதெங்கும் நிறைந்திருந்த மல்லிகா டீச்சர், பதி சார் , சுவாமிநாதன் சார், வனசுதா டீச்சர் , அடி பின்னிய தமிழ் ஐயா வேலுச்சாமி சார், ஹெட்மாஸ்டர் துரைசாமி சார் , எட்டாம்பு படிக்கும்போ எழுத்தைத் திருத்திய பழனி சாமி சார், இன்னும் இன்னும் எத்தனை பேர் ...!! அத்தனை பேருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் ...ஒரு சிறு கிராமத்தின் பெரும் வசதிகள் எதுவுமற்ற பள்ளியில் பிரதி பலன் எதுவும் எதிர்பார்க்காமல் சொற்ப சம்பளத்தில் தங்கள் கடமையைக் கண்ணாய் கருதி தங்களிடம் படித்த குழந்தைகளின் நலனை நெஞ்சில் தாங்கி உழைத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு எவ்விதம் நன்றி சொல்ல ..!!

periyasami சொன்னது…

we salute for that great teachers.
A bad teacher always complains!
An average teacher teaches!
A good teacher explains!
A great teacher inspires!!!
-- Vivekanandha seva trust Palani.

Rathnavel Natarajan சொன்னது…

மிக்க நன்றி கதிர் சார்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நண்பர்கள் இந்த பதிவை படித்து பதிவில் உங்கள் கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை மண்ணின் மைந்தரில் பதிவு.