சனி, 28 ஜனவரி, 2012

இப்படிக்கு, தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்

இந்த நினைவுக் குறிப்பை (கட்டுரையை) கடந்த ஆசிரியர் தினத்தையொட்டி எழுதினேன். குறிப்பாக அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களைப் பற்றியதாக இருந்தாலும், எனக்குப் பிடித்தமான ஆசிரியர்களின் பண்புகளை எடுத்துரைப்பதன் வாயிலாக மாணவர்களுக்குப் பிடித்தமான, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு விருப்பமான முறையில் பாடங்களை நடத்துவது மட்டுமல்லாது அவர்களின் தனி மனிதப் பண்புகளை வளர்த்தெடுப்பவர்களாகவும், உயர்ந்த இலட்சியங்களோடு அவர்களை உருவாக்குபவர்களாகவும் உள்ள ஆசிரியர்களின் தன்மைகளை இக்கட்டுரை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன். நம் கல்வித் திட்டத்தைப் பற்றிய விமர்சனத்தில் முக்கியமானது, கல்வி கற்றல் முறை, மாணவர் திறன் வளர்ப்பு மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவு முறைகளை மறுசீராய்வு செய்வதாகும். அதையொட்டி, nostalgia பார்வையில், ஆசிரியர்களுக்குரிய பொதுவான குணாதிசியங்களை விமர்சன முறையில் இங்கு பட்டியலிட்டு இருக்கிறேன். மேலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆசிரியர்களின் கடமையையும் சுட்டிக் காட்டியிருப்பதாக எண்ணுகிறேன். 


  இப்படிக்கு, 
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்ஆசிரியர் தினத்தில் என் மனதில் உருண்டோடிய, எனக்குக் கற்றுக் கொடுத்த பேராசான்களைப் பற்றிய ஞாபகக் குறிப்புகள்...  என் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் மாலை நேரத்து அந்தியாய் என் மனதை வண்ணங்களால் பூசியிருக்கிறது. அவர்களை நினைக்கும் அந்த தருணம் மழைக்காலத்தில் தோன்றும் வானவில்லைப் போல வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. சிறு பிராயத்திலிருந்து எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் வேறுவேறான பிம்பங்களாய் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒருவிதம். மாணவர்களை வசீகரிப்பதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி உத்திகள் உண்டு. வெவ்வேறான சூழலிருந்து வரும் எல்லோரையும் வகுப்பறையில் ஒரே சூழலுக்குள் கொண்டு வரும் பணி அவர்களுடையது. பாடம் சொல்லித் தரும் நேரங்களில் அனைவரையும் ஒரே மனநிலைக்குள் இழுத்து வர அவர்கள் கையாளும் வழிமுறைகள் ஏராளம். காற்றடித்து மணல் பறந்தாலும் குலையாத பாலைவனங்களின் மணற்கோடுகள் மாதிரி அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் நீண்டு கிடக்கின்றன.


இன்றைக்கும் என் ஒன்றாம் வகுப்பின் ஆசிரியர் சுசீலா டீச்சர், இரண்டாம் வகுப்பின் ரஞ்சிதா டீச்சர் எப்படி பாடம் நடத்துவார்கள் என்பது என் கண்  முன்னால் நிழலாடுகிறது. மூன்றாம் வகுப்பில் எங்களை மகிழ்வித்த ராஜசேகர் சாரின் விளையாட்டுக்களை எங்களால் மறக்க முடியாது. போலீஸ்காரரைப் போல பெரிய மீசை வைத்துக் கொண்டு  அடிக்கமாலேயே எங்களைப் பயமுறுத்துவதையும், இரண்டு காதுகளையும் கொத்தாகப் பிடித்து தூக்குவதையும் நினைக்க நினைக்க இப்போதும் மனது குதூகலம் அடைகிறது. போலீஸ் வேலையை உதறி விட்டு ஆசிரியர் வேலைக்கு வந்தததாக எங்களுக்குள் நாங்களே புரளியைக் கிளப்பி விட்டு, அதை உண்மை என்று மனதார நம்பினோம். இப்படி பல புரளிகளைக் கிளப்பி விடுவதும், அதை உண்மை என்று எங்களுக்குள் தலையில் அடித்து சத்தியம் செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.


இந்த ஆசிரியர் தினத்தில், அவர்களை நினைவுகூரும் போது பிரம்புகளோடும், ரூல் தடியோடும் சிலர் வந்து போகிறார்கள். அவர்களை எவ்வளவு வசை பாட முடியுமோ அவ்வளவு வசை பாடியிருக்கிறோம். எங்களுடைய எல்லா சாபத்திற்கும் பலிகடா ஆவதிலிருந்து அத்தகைய எந்த ஆசிரியரும் தவறியதில்லை. அவர்களின் சைக்கிள் டயர்களில் காற்றைப் பிடுங்கி விடுவது, இருக்கையில் களிமண்ணைத் தடவி விடுவது, 'டீ' யில் எச்சில் துப்பி வைப்பது என அவர்களைப் பழி வாங்குவதில் வெற்றி கண்டிருக்கிறோம். ஆனால், சில ஆசிரியர்களின் மீது மட்டும் அன்பும், மரியாதையும் அளவற்று சுரக்கும். அவர்கள் செல்லமாக கன்னத்தைக் கிள்ளிய இடம் இன்றும் சுகம் தருகிறது. என்னுடைய சேட்டைகளில் திடீரென கோபமடைந்து அவர்கள் பிடித்துத் திருகிய காதையும், வயிற்றையும் இச்சமயம் தொட்டுப் பார்த்தால் கூசுகிறது. அவர்களை யாரவது திட்டினாலோ, சாபமிட்டாலோ எனக்கு பொல்லாத கோபம் வந்திருக்கிறது.


அந்த வரிசையில் வரும் நான்காம் வகுப்பு ஆசிரியர் பிரேமா டீச்சர், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நாகஜோதி டீச்சர் இன்றைக்கும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வரும் போது, அவர்களோடு நட்பு பாராட்ட போட்டி போடுவோம். எல்லா விளையாட்டுக்களிலும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதில் பெருமிதம் கொள்வோம். அவர்கள் எது செய்தாலும் ஆர்வத்தோடு கவனிப்பதற்கும், என்ன சொன்னாலும் கேட்பதற்கும் ஒரு கூட்டம் தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும். இன்றைக்கும் அவர்களோடு பேசும் போது நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பின்னும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பார்கள். தேவதைகளும், தேவதூதர்களும் சூழ, கழிந்த என் குழந்தைப் பருவம் இனிமையான முறையில் அமைந்திடக் காரணமானவர்களோடு ஐ.ஏ.எஸ். அதிகாரியான பின்னும் தொடர்பில் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறதென்று நான் சொல்லுவேன்.
ஒரு மாணவன் பள்ளியில் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியையும், எவ்வளவு மகிழ்ச்சிகரமாக ஆக்க முடியுமோ அதை மிக எளிதாக நடத்திக் காட்டும் ஒரு ஆன்மா திருமலை சார். கல்வித்திட்டம், பாடத்திட்டம், பள்ளி விதிமுறைகள், நடைமுறைகள், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பு என்று எதுவெல்லாம் மாணவர்களின் மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்கிறதோ அதை அனைத்தையும் துச்சமென நினைத்து தூக்கி எறிந்து விட்டு, மாணவர்கள் விரும்பும்படி கதைகள் மட்டுமே சொல்லுவார். அவர் வரலாறு, புவியியல் என எந்த பாடம் எடுத்தாலும் வகுப்பில் சிரிப்பு சத்தம் அடங்கவே அடங்காது. அனைவரது மனமும் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தோடும். மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்து அதிலேயே லயித்திருக்கும் வாய்ப்பு அவருடைய வகுப்புகளில் மட்டுமே கிடைக்கக் கூடியது. ஒரு மனிதனின் முகம் அவ்வளவு பிரகாசத்தை அடையக்கூடியதா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் தோன்றும். அவர் மட்டுமே இத்தனையையும் செய்து காட்டக்கூடிய பெரும் வல்லமை பொருந்தியவர். தேவையில்லாமல் மாணவர்களை தொல்லைகளுக்கு உள்ளாகும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களோடு மல்லுக் கட்டி, சண்டை போட்டு, அனைவரிடமும் பகை வளர்த்துக் கொள்பவர். என்னுடைய உயர்நிலைக் கல்வியைத் தித்திக்கும் பாகாக்கியவர்.


ஒரு சிற்பியைப் போல தேவையல்லாதவற்றை நீக்கி, அவசியமான இடங்களில் எல்லாம் உளியடித்து என்னை ஊர் பாராட்டும் சிற்பமாக்கிய அன்புச்செல்வன் சாரைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். என்னுடைய மேல்நிலைக் கல்வியில் சிறப்பானதொரு வெற்றியை அடைவதற்கும், வாழ்க்கையில் நல்லதொரு நிலையை எட்டுவதற்கும் காரணகர்த்தவானவர். ரொம்பவும் அமைதியான சுபாவம் என்றும் சொல்வதற்கில்லை; ஆனால் அர்த்தமிழந்த வார்த்தைகளைத் துணைக்கு எடுத்துக் கொண்டும் பேச மாட்டார்;  கண்டிப்பானவர்; ஆனால் எடுத்ததெற்கெல்லாம் பின்னி எடுக்கிற 'பயில்வான்' வாத்தியார் இல்லை. மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டுமென முடிவெடுத்து அதற்கான பயணத்தில் தளராமல் நடை போட்டவர். மாநகராட்சிப் பள்ளியிலிருந்து மாநில அளவில் மதிப்பெண்கள் பெற எண்ணுவதை இளக்காரமாகப் பார்ப்பதுதான் யதார்த்தம். ஆனால், தன்னுடைய மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று திடமாக நம்பியவர். எங்களைக் கல்வியில் சாதிக்க வைப்பதற்கு எங்களை விட கடுமையாக உழைத்தவர். அதனை என் மூலம் நிறைவேற்றிக் காட்டிய போராளி. இவ்வாறே, என்னுடைய பள்ளிக்காலத்தில் பலவற்றை என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்று வந்திருக்கிறேன். சில ஆசிரியர்களிடம் சில குணங்கள் பிடித்திருந்தன. மற்ற சிலரிடம் மற்ற சில பண்புகள் விருப்பமாய் இருந்தன. எனக்குப் பிடித்த அனைத்து குணநலன்களோடும் எல்லா ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று சிறு வயதில் எத்தனையோ முறை கனவு கண்டிருக்கிறேன், அது ஒருபோதும் நிறைவேறியதில்லை. உலகத்தில் இருக்கும் எதுவும் எந்த குறைகளுமற்ற, எல்லாமும் நிறைந்த முழுமையோடு இருப்பது சாத்தியமில்லை என்பதைக் காலம் செல்லச் செல்ல புரிந்து கொண்டேன்.
என்னுடைய பள்ளிக்காலம் முழுவதும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கழிந்தது. என்னோடு படித்த பெரும்பாலான மாணவர்கள் நான் உட்பட கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள்தான். நான் படித்த ஆரம்பப் பள்ளி வீட்டிற்கு அருகாமையில் எங்களுடைய சேரியை ஒட்டியே இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்தாலும் இருட்டும் வரை விளையாடி விட்டுத்தான் போவோம். என்னுடைய அம்மா அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு மாலை ஆறரை மணிக்குத்தான் வீடு திரும்புவார். வந்ததும் எங்களின் பசியாற்றுவதற்கு சமைக்கத் தொடங்கி விடுவார். நாங்கள் பள்ளியில் என்ன படித்தோம்; ஆசிரியர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்கள்; வீட்டுப்பாடம் எதுவும் செய்ய வேண்டியிருக்கிறதா; தேர்வு எதுவும் வருகிறதா; அதற்கு எதுவும் படிக்க வேண்டுமா என்று எந்த கேள்வியும் கேட்டதில்லை. காரணம், படிக்கிற குழந்தைகளிடம் இதை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாது. என்னுடைய தந்தை வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் செய்கிறவர். மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். 'படிச்சு பெரிய ஆளா வரணும்' என்கிற தினசரி அறிவுரையைத் தவிர அவரும் இதைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. (எனினும், படித்த பெற்றோர்களை விட அவர்கள் நிறைய நற்பண்புகளை எங்களுக்கு  போதித்திருக்கிறார்கள்)


இப்படித்தான் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் யாரும் கட்டணம் செலுத்தி மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வதில்லை. பாரதியார் பாடியதைப் போல மாலையில் ஓயாமல் ஓடி விளையாடிக் கொண்டிருப்போம். இந்த பெற்றோர்கள் அனைவரும் பறவைகள் இரை தேடிச் செல்வதைப் போல காலை எழுந்தவுடன் சென்று வானம் தன்னை இருளால் மூடிக் கொள்கிற இராப்பொழுது வீடு வந்து சேர்வார்கள். தங்கள் உடலை தாங்களே முறுக்கிப் பிழிந்து சாறு எடுத்து முதலாளிகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும், சூப்பர்வைசர்களுக்கும் கொடுத்து விட்டு சோர்ந்து போய் வருவார்கள். வந்து சேர்ந்ததும் சமைப்பதும், பரிமாறுவதும், சுற்றத்தாருடன் சற்று நேரம் உரையாடுவதும், உறங்குவதும், உறங்கி எழுந்து அடுத்த நாள் அதே பணியைத் தொடர்வதுமாக இவர்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் சுழற்சியால் ஏற்பட்ட சோர்வும், கங்காணிகள், மேஸ்திரிகளின் கண்காணிப்பில் வளர்ந்த வெறுப்பும் இவர்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதில் அக்கறை கொள்ளாமல் செய்திருக்கலாம்.


இந்நிலையில், இந்த குழந்தைகள் எதாவது விசயங்களைக் கற்கிறார்கள் என்றால் அது பள்ளிக்கூடத்தில்தான்; அதுவும் ஆசிரியர்களிடத்தில்தான். ஒரு மாணவரின் வாழ்க்கையை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்கை நாம் வகிக்கிறோம் என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட்டார்களா என்று அவ்வளவு எளிதில் என்னால் சொல்லி விட முடியவில்லை. ஆனால், கடலுக்கு நீல நிறத்தை அளிக்கும் வானத்தைப் போல ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் எதிரொலிப்பு எப்போதும் இருக்கிறது.


ஆசிரியர்கள் அறியாமல் ஒவ்வொரு மாணவரும் அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். அவர்களுடைய செயல்களைக் கூர்ந்து நோக்குகிறார்கள். ஆசிரியர்கள் பேசுகிற முறை, நடக்கிற நடை, சிரிக்கும் விதம், கோபம் கொள்ளும் பாங்கு என அத்தனை உணர்சிகளையும் கற்கிறார்கள். பல பேரின் கையெழுத்து நடை அவர்களின் ஆசிரியர்களின் கையெழுத்து நடையோடு ஒத்திருப்பது கூட இந்த 'கூர்ந்து நோக்குதலினால்' ஏற்படுவதேயாகும். பெற்றோர், உடன்பிறந்தார், சுற்றத்தார் என அனைவரிடமிருந்தும் நிறைய விசயங்களைத் தருவித்துக் கொண்டாலும், ஆசிரியரிடமிருந்து உள்வாங்கிக் கொள்வதுதான் அதிகமாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம், படிக்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய ஆசிரியர்களே எல்லாரைக் காட்டிலும் புத்திசாலி; திறமைகள் நிரம்பியவர். நாட்கள் நகர நகர அவர்களுடைய எண்ணம், மதிப்பீடு மாறலாம். ஆனால் அவர்கள் மீதான பிரமிப்பும், மரியாதையும் எப்போதும் குறையாது. இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி இதுதான், ஆசிரிய வர்க்கத்தில் அடங்கிய எல்லா ஆசிரியர்களும் இதைப் புரிந்து கொண்டு  நல்ல குழந்தைகளை,  மனிதர்களை உருவாக்குவதில் சுய உணர்வோடும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்கிறார்களா?

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஐ.ஏ.எஸ். ஆன அந்த நொடிப்பொழுது....

ட்ரிங்.... ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...
மாலை
நான்கரை மணி இருக்கும். அரைக்கால் தூக்கத்தில் இருந்த எனக்குத் தெளிவாக கேட்டது. புது தில்லியில் நேர்முகத் தேர்வை முடித்து விட்டு சென்னைக்கு வந்த பின்பு முதல் நிலைத் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த நேரம். இறுதிக் கட்ட முடிவுகள் எப்போதும் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
'ஹலோ!' அறைத் தோழன் பிரபு தனக்கு வந்த அழைப்பில் பேசத் தொடங்கினான்.
'என்னது.
.. ரிசல்ட் வந்துருச்சா?' மறுமுனையில் இருந்து பேசியவரிடம் நான் பேசாமலேயே அச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். ஒளியின் வேகத்தில் ஒரு பாம்பு மின்னலைப் போல அடி பாதத்தில் இருந்து குறுக்காக உடல் முழுதும் ஓடி உச்சந்தலையை அடைந்தது.
'
எப்போ?'
'
யார் யார் க்ளியர் பண்ணியிருக்காங்க?'
'
வீரபாண்டியன்... வீரபாண்டியன்... 'ரிசல்ட் வந்துருச்சு' ன்னு சொல்றாங்க வீரபாண்டியன்'.
'
ம்ம்.... இந்தா வர்றேன் பிரபு' பொறுமையாகத்தான் சொன்னேன். ஆனால் உடலெங்கும் மின்சாரம் பாய்ச்சியதைப் போல ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. ஏற்கனவே சூடு வாங்கிய அனுபவம் மீண்டும் தலை எட்டிப் பார்த்தது. பல நல்ல உள்ளங்களின் நன்கொடையாலும், பொன்மனங்களின் பொருளுதவியாலும் படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த பதற்றம் வர வேண்டும். ஆனால் இது மற்றவர்களுக்கு வழக்கமாக ஏற்படும் பயத்தால் தோன்றியதல்ல. இதற்கு வேறொரு தன்மையும், காரணமும் உண்டு.
 
'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'
என்னும் குறள் ஒன்று உண்டு. அதைப்போல அப்படி உதவி செய்தவர்களுக்கு திருப்பி 'நன்றிக்கடன் செலுத்துதல்' என்னும் விழுமியமும் நம் சமூகத்தில் போற்றத்தக்கது. எப்போது என்னுடைய கல்விக்காக நான் கேட்காமலேயே உதவிகள் என்னைத் தேடி வந்ததோ, அப்போதிருந்து அதன் பொருளை நன்கு உள்வாங்கியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் எந்த நோக்கத்திற்காக எனக்கு உதவிகள் தரப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைந்து காட்டுவதுதான் நான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் என்று நம்புகிறேன். தனக்கு உகநத்ததாக காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக சாமிக்கு நேர்ந்து கொண்டு, தானாக நிறைவேறும் என்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் பலனை எதிர்பார்க்கும் பக்தனைப் போல இருக்கக் கூடாது. தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைவதில் தீவிரம் காட்ட வேண்டும். நான் ஐ ஏ எஸ் அதிகாரியாக வேண்டும் என்னும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவ்வாறான தீவிரத்தையும், கடும் உழைப்பையும் செலுத்த என்றும் தவறியதில்லை. அந்த லட்சிய வேட்கையும், நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்னும் உந்துதலும் தந்த பதற்றமே இந்த நேரத்தில் என்னில் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. இதைத்தான் 'இதற்கு வேறொரு தன்மையும், காரணமும் உண்டு' என்றேன். 

அவ்வுணர்வோடு பாயை விட்டு எழுந்து பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தேன். சிறிது நேரம் எந்த நினைவுகளுமன்றி மனதை வெறுமையாய் ஆக்கிக் கொண்டேன். எந்த உணர்வுகளுக்குள்ளும் சிக்காமல் அப்படியே இருந்து விட்டால் நன்றாகத்தானிருக்கிறது. வெறுமையாக இருப்பது எவ்வளவு சுகமானது என்று எனக்குத் தெரியும். பொருளாதாரச் சிக்கல்களால் மனம் தனக்குள்ளேயே யாரும் அறியாமல் வெம்பி வெதும்பும் போது, அதிலிருந்து விடுபட்டு உணர்வுகளற்ற நிலைக்குத் தாவுகிற வித்தையை எங்கு கற்றேன் என்று தெரியவில்லை. மனிதனை அவன் வாழுகிற காலமும், சமூகச் சூழலும் வார்த்தெடுக்கிறது என்பது உண்மையே. என்னுடைய வாழ்க்கைச் சூழல் 'வெறுமைக்குத் தாவுதல்' எனும் கலையை கற்றுக் கொடுத்திருக்கலாம். அப்படி ஒரு சமமான, வெறுமையான மனநிலையில் சில நொடிகளுக்கு மேல் இருக்க முடிவதில்லை. ஆனால், அந்த நொடிப் பொழுதுகள் என் வாழ்க்கைக் காலம் முழுவதும் எத்தனை பெரிய துன்பங்களையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து செல்வதற்கான ஊக்கத்தைத் தரக் கூடியது. அரசு அலுவலகங்களில் தேங்கி, நிரம்பி வழியும் கோப்புகளைப் போல என் மனதில் ஒன்றன் மீது ஒன்றாக சேர்ந்து தேங்கிக் கிடக்கும் அத்தனைக் கவலைகளையும், சோர்வுகளையும் அந்த வெறுமையான மனநிலை நொடிப் பொழுதுகளில் அழித்து விடும் மாயம்தான் என்ன! மணலில் எழுதி வைத்ததை அதன் சுவடுகளே தெரியாமல் அழித்து விட்டுச் செல்லும் கடலலையைப் போல வந்து அழித்து விட்டுச் சென்றது. ஆனால் இந்த நிலை எப்போதும் வாய்ப்பதில்லை. பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போல எப்போதாவது வந்து, மனதில் படிந்து உறைந்து கிடக்கும் ரணங்களின் சூட்டைத் தணித்து விட்டுச் செல்லும். எனக்கு நினைவு தெரிந்து இரண்டு மூன்று முறை இப்படி உணர்ந்திருக்கிறேன்.

ஆனால் இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த நிமிடத்தில், இந்த நொடிப்பொழுதில் நான் உணர்ந்த 'வெறுமை' என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. சில நொடிப்பொழுதுகள் தங்கியிருந்த அந்த குறிப்பிட்ட 'வெறுமை மனநிலை' அடுத்த சில நொடிப்பொழுதுகளில் என் காதுகளுக்கு வந்து சேரப் போகும் செய்தியால் இன்றைக்கு முக்கியமாகப் படுகிறது.
'
என்ன வீரபாண்டியன், ரிசல்ட் பாக்கப் போகலாம்ல' என்று சிவநாதன் சொன்ன போது, மீண்டும் மின்சாரம் பாய்ச்சிய உடல் சேரில் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தேன். முகத்தைக் கழுவி விட்டு 'synergy institute'க்குப் போகலாம் என நினைத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றேன். இந்த உடலில் தண்ணீர் பட்டும் ஏதும் ஆகவில்லை. வழிந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த பொழுது, என் செல்போனில் மணி அடித்தது. மெதுவாகப் போய் எடுத்தேன். நண்பர் பி.பி.டி ரமேசின் எண்ணைப் பார்த்தப் பிறகு செல்போனைக் காதில் வைத்தேன்.
'
வணக்கம் சார்!'
'
என்ன வீரபாண்டியன் ரிசல்ட் பாத்திங்களா?'
'
இன்னும் பாக்கலை சார்'
'
அட என்னது... வாழ்த்துக்கள் வீரபாண்டியன்... நீங்க க்ளியர் பண்ணிட்டீங்க. வாழ்த்துக்கள்... '
'
சார் நெசமாத்தான் சொல்றீங்களா?' ரமேசின் வார்த்தைகள் நீண்ட காலம் ஒருதலைப் பட்சமாக உருகி உருகிக் காதலிக்கும் காதலனிடம் தான் ஏங்கித் தவிக்கும் காதலியே நேரில் வந்து தன்னுடைய காதலைச் சொல்லியது போல இருந்தது . இந்த கணம் கூட அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு என் செவிகளில் மிகத் தெளிவாக எதிரொலிக்கிறது. அவருடைய தெளிவான வார்த்தைகள் என் உடலை, உள்ளத்தை, சிந்தனையை ஒரு புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு உள்ளிழுத்துச் சென்று சில நொடிப்பொழுதுகளைத் தெளிவற்றதாக மாற்றிப் போட்டது.
'
அட உண்மையிலேயே வீரபாண்டியன். சிபியும் க்ளியர் பண்ணிட்டான்'
'
ரொம்ப நன்றி சார். நானும் ரிசல்ட் பாக்கத்தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன். ரொம்ப நன்றி சார்'
முகம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்த படி வந்த அறைத் தோழர்கள் பிரபுவும், சிவநாதனும் 'என்ன வீரபாண்டியன், க்ளியர் ஆயிடுச்சா?' எனக் கேட்டனர்.


'ஆங்... க்ளியர் ஆயிடுச்சாம் பிரபு' சொன்ன மறுநொடி எங்கள் உடல் ஒன்றோடொன்று தழுவிக் கொண்டது. மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்கு சரியான உடல்மொழி அதுவாகத்தானிருக்க முடியும். சிவாவோடும் அதே தழுவல். அதே பரிமாற்றம்.
'என்ன ரேங்க் வீரபாண்டியன்' இது சிவா.
'அத கேக்கல சிவா. ரிசல்ட் வந்துருச்சுன்னு மட்டும்தான் சொன்னார். ரேங்க் எதுவும் சொல்லல. நானே போய் பாத்துட்டு வந்துடுறேன்'
'சீக்கிரம் போயிட்டு வாங்க... ட்ரீட்ட ஆரம்பிச்சுடலாம்'
நடந்து கொண்டிருந்த போது
சிபியிடம் இருந்து அழைப்பு மணி வந்தது.
'என்னப்பா தம்பி. ரிசல்ட் பாத்தியா?'
'அதுக்குத்தான்ப்பா போய்கிட்டு இருக்கேன். ஆமா, ஒன்னோட ரேங்க் என்ன'
'என்னோட ரேங்க் விடு. ஒன்னோட ரேங்க் என்ன தெரியுமா?'
'இன்னும் தெரியலப்பா. அதப் பாக்கத்தான்
போய்கிட்டு இருக்கேன்'
' உறுதியா ஐ ஏ எஸ் தான். 53 வது ரேங்க்பா நீ. தம்பி சொன்ன மாதிரியே 'ஹோம் காடர்' ஐ ஏ எஸ் வாங்கிட்டியேப்பா' .ஹெர்குலஸ் தான் பன்னெடுங்காலமாக சுமந்து வந்த பூமி உருண்டையைக் கீழே போட்டு விட்டு நிரந்தரமான ஓய்வு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அப்பூமி உருண்டையை எட்டி உதைத்து விளையாடியதைப் போல் என் மனம் விளையாட ஆரம்பித்தது. ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி குகைக்குள் நுழைந்து கூண்டுக்குள் இருந்த கிளியைப் பிடித்து, அதை ரத்தம் சிந்த வைத்து கொடூரமான அரக்கனைக் கொன்று, அவன் பிடியில் இருந்த மக்களை விடுதலை செய்த ஒரு மாவீரன் விட்ட நிம்மதிப் பெருமூச்சை ஒத்திருந்தது என் அந்த கணத்து மூச்சுக் காற்று.

இருநூறு அடி தாண்டியிருப்பேன். என்னைக் கேட்டால் இந்த இருநூறு அடி நடைக்குள் மனதில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் முக்கியம் என்பேன். சாலைகளில் என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் எப்போதும் போலவே ஹார்ன் ஒலி எழுப்பி என்னைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஒரு வெற்றித் திருமகன் வருகிறான் என்று எவரும் பாடல் படவில்லை. என் உருவத்தை தன் கண் பாவைக்குள் பதித்துக் கொண்டாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நகர்ந்து கொண்டே சென்றனர் மனிதர்கள். வேகத்தில் இடிப்பதைப் போல சென்ற என்னைத் திட்டி விட்டுப் போயினர் இருவர். ஒரு யுகக் கனவை நனவாக்கிய நாயகன் நடந்து வருகிறான் என்று எவரும் வழியெங்கும் பூ தூவவில்லை. ஹெர்குலஸ் எட்டி உதைத்து விளையாடிய பூமி உருண்டை திடீரென மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது. அதில் சாதாரண மிகச் சிறு மனிதப் பூச்சி நான் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அரக்கனைக் கொன்ற மாவீரனைப் போன்ற பெருமூச்சின் வெப்பமும், அடர்த்தியும், வேகமும் குறைந்து விட்டது. சிந்துபாத்தின் கண் முன் விரிந்து கொண்டே செல்லும் முடிவற்ற தொடர்கதையைப் போல, என் கண்களுக்கு இந்த உலகம் தென்பட்டது.