சனி, 1 ஜூலை, 2017

அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ் ஆனேன்

அம்பேத்கர் தீண்டத்தகாதசாதியில் பிறந்தவர் என்ற சாதிப்பற்றினாலோ, அம்பேத்கரின் உழைப்பால் கிடைத்த இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்தவன் போன்ற அற்பக் காரணங்களுக்காகவோ நான் 'அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ் ஆனேன்!!' என்று சொல்லவில்லை. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும், பேச்சும், எழுத்தும் ஒரு மனிதனை மாமனிதனாக மாற்றும் வல்லமையைக் கொண்டது. அம்பேத்கரைப் படித்த எவரும் எவ்வளவு உயர்ந்த நிலைக்கும் உயரலாம் என்ற உண்மைப் பலபேருக்குத் தெரிவதில்லை. சாதியப் புரையோடிப் போயிருக்கும் கண்களுக்கு எந்த கண்ண...ாடி போட்டாலும் அம்பேத்கரின் அறிவார்ந்த உண்மை முகம் புலப்படுவதில்லை என்னும் காரணத்திலிருந்துதான் இந்தக்கட்டுரை எழுத வேண்டிய தேவை எழுந்தது.
http://www.vikatan.com/…/130425-veerapandian-ias-talking-ab…
இந்த கட்டுரை தலித் மாணவர்களை மனதில் வைத்து பௌர்ணமி அறக்கட்டளையின் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது. இதைப் படித்த அன்புக்தங்கை பாடலாசிரியர்-கவிஞர் உமாதேவி இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். தலித் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் இந்த கருத்துக்கள் ஈர்க்கும் என்று கருதினார். இதை வெளியிட கடும் முயற்சிகள் எடுத்த தங்கை உமாதேவிக்கு நன்றி சொல்வது ஒரு சடங்குதான். இதன் உள்ளடக்கம் கருதியும், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டியும் நடுப்பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு செய்த ஜூனியர் விகடன் ஆசிரியர் தோழர். ப.திருமாவேலன் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சில எழுத்துப்பிழைகளும், சிற்சில செய்திகளும் தவறாக உள்ளன. பக்ரா நங்கல் திட்டம் என்பது தவறு. அந்த இடத்தில் ஹிராகுட் திட்டம் என்று வர வேண்டும். 'இறுதிகால விடுதியிலிருந்து' என்பது 'இரவு தங்கும் விடுதியிலிருந்து' என்று வர வேண்டும். பொதுவெளி கருதி பல வரிகள் விடுபட்டிருக்கிறது. இதை வெளியிட்டதற்காக ஜூனியர் விகடனுக்கு நன்றிகள்! 'எடிட்' செய்யப்படாத முழுக்கட்டுரையையும் வெளியிடுகிறேன்.


அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன்!!

'அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன் !!' - நான் 2009ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவுடன் என்னை நேர்காணல் செய்து செய்திகளை வெளியிட்ட செய்தியாளர்களில் சிலர் அவர்களின் செய்திக் கட்டுரைகளுக்குக் கொடுத்த தலைப்பு இது. இந்தத்  தலைப்பைப் படித்தவுடன் அனைவருக்கும் எழும் கேள்விகள் இதுதான். அம்பேத்கருக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் அந்த கேள்வி. உலகின் எந்த மூலையானாலும் மனிதனாகப் பிறந்த ஒருவனுக்கு தான் பிறந்த சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்னும் வாழ்க்கை லட்சியம் இருக்கும். அப்படிப் பலருக்கும் லட்சியம் இருப்பதே சமூக யதார்த்தம். ஆனால் இந்தியாவில் மட்டும் சமூக யதார்த்தம் வேறுவகையாக இருக்கிறது.

இந்தியாவின் சமூக யதார்த்தம் ஒருவர் பிறந்த சாதி, அவரின் பொருளாதார நிலை, வாழிடச் சூழல் பொறுத்து அமைகிறது என்றாலும் சாதி என்னும் காரணி இந்தியாவில் பிறந்த ஒருவரின் வாழ்க்கை லட்சியங்கள் நிறைவேறுவதில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. இந்த சாதி எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதை கண்டுகொள்வது எளிது. ஏனென்றுச் சொன்னால் பிறந்த நொடி முதல் இறக்கும் நொடி வரை சாதி விளையாடும் சதிராட்டத்தை ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த சதிராட்டத்தில் திறமையாக விளையாடி எல்லோரும் வெற்றியை அடைவதில்லை. இந்த சதிராட்டத்தின் ஆணிவேரையும், அது இயங்கும் நுட்பங்களையும் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகும்.

தன்  இளம்பிராயத்தில் கிராமத்தின் ஒதுக்குப்புறங்களிலும், நகரத்தின் சேரிகளிலும் ஒரு தலித் சிறுவன் எதிர்கொள்ளத் துவங்கும் சாதியமைப்பின் பரமபத ஆட்டம் எப்போதும் சாதிப்பாம்பின் விச நாக்குகளால் கொத்திக்கொத்திக் கீழே தள்ளப்பட்டு வீழ்ச்சியை மட்டுமே சந்திக்கும் துர்பாக்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஏறிச் செல்வதற்கு எல்லோருக்கும் ஏணிகள் கிட்டுவதில்லை. இவ்வாறான நிலையில், நம்முடைய முன்னோர்கள், நமக்கு மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்களின் வரலாறு நமக்குப் பல படிப்பினைகளைத் தருகிறது. நாம் வாழும் சமூக, வாழ்க்கைச் சூழலோடு மிகவும் நெருக்கமாகவும், பல விதங்களில் ஒத்துப்போகவும் கூடிய முன்னோர்களின் வாழ்க்கைச் சூழல் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தரும்.

அதிலும், சமூகத்தின் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்ற உத்வேகம் கொண்டவர்கள் அவர்களை விட உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதும், அதிலிருந்து தனக்குத் தேவையான செய்திகளை எடுத்துக் கொள்வதும் அவர் லட்சியங்களை அடைவதற்கு  உறுதுணையாக இருக்கும். கலெக்டராக வேண்டும் என்னும் கனவு கண்ட சிறு வயதில்  நான் படித்த 'அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு' நான் பாதை மாறும் ஒவ்வொரு இடத்திலும் எனக்கு சரியான வழியை காட்டி, சோர்ந்து விழும் பல நேரங்களில் என்னை உற்சாகப்படுத்தி இந்த நிலைக்குகொண்டு வந்து சேர்த்தது. அதன் அடிப்படையில்தான், அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன்!! என்று சொன்னேன்.

ஜனநாயகத்தின் அடிப்படையிலான, சமத்துவத்தை நோக்கிய, என்றைக்கும் சிதறுண்டு போகாத வலிமையான நவீன இந்தியாவை உருவாக்கிய தலைசிறந்த சிந்தனையாளர் அம்பேத்கர். அவர் மேதாவிகளின் மேதாவி. அப்படியொரு சிந்தனையாளரின் வாழ்க்கையில் நடந்த தீண்டாமைக் கொடுமைகள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறக்கும் எவருக்கும் நேரக் கூடியதுதான். ஆனால் அந்த கொடுமைகளின் பிடிகளிலிருந்து ஒரு  ஒடுக்கப்பட்டவன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இந்திய சமூகத்தின் படிநிலை அமைப்பில் மேல்நோக்கி முன்னேறிச் செல்லலாம் என்கிற பெருங்கனவோடு போட்டிகள் நிறைந்த  களத்தில் உள்ளே நுழையும் தலித் மாணவர்களும், இளைஞர்களும் கொலைகளுக்கும்  தற்கொலைகளுக்கும் பலியாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தலித் இளைஞனின் பார்வையிலிருந்து கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் தள்ளத்தூண்டும் காரணிகள் யாவை என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கிறேன். ஒன்றே ஒன்றுதான் உறுத்திக்கொண்டு தெரிகிறது. அது அவன் பிறந்த சாதி. பிறப்பில் ஒட்டிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட சாதி அடையாளம் இந்த மண்ணை விட்டு மனிதன் மறைந்தாலும் மறைவதேயில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒருவனுக்கு அது இன்னும் பெரும் கேடுகளை விளைவிக்கிறது.

இந்த நிலையில் சிறு வயது தீண்டாமைக் கொடுமைகள், வறுமையின் நெருக்கடி, ஆதரவற்ற கையறு நிலை ஒரு தலித்தை அன்றாடம் தன் உயிரை நிலைநிறுத்திக் கொள்ளவே சொல்லி மாளாத இன்னல்களைச் சந்திக்க வைக்கிறது. துயரங்களைச் சுமப்பவனாக இந்திய சமூகம் அவனின் வாழ்க்கையை நிர்ணயித்திருக்கிறது. இதில் அவன் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்வதற்கு எந்த நிலையிலும் வாய்ப்பில்லை. மேலும் அவன் வாழ்வில் இலட்சியங்கள் ஏதுமற்றவனாக, அதன் பொருளைக் கூட விளங்கி கொள்ள முடியாதவனாக ஆக்கி வைத்திருக்கும். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த எவரும் சாதிக்கும் எண்ணத்தோடு உலவக்கூடாது என்பதுதான் இந்த ஆட்டங்களின் ஒரே விதியாக இருக்கிறது. சாதி தீண்டாமை, பொருளாதார நெருக்கடி, படித்த பெற்றோர்களின் வழிகாட்டுதல்கள் அமையாமை, கல்விப் பின்புலம் இல்லாமை போன்ற பல்வேறு துன்பங்களுக்கிடையில்  தட்டுத் தடுமாறித் தன்  தனிப்பட்ட திறன்களால் முன்னேறும் ஒரு sc இளைஞனுக்கு ஏறும் ஏணிகளாய் இருக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் கூட உயிரைக் கொல்லும் விசப்பாம்புகளாய் மாறிப் போன காலம் இது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,  கீழ்க்காணும் சூழலில் படிக்கும் பெரும்பாலான தலித் மாணவர்களுக்கு வருந்தத்தக்க மனத் தடைகள் உள்ளன. அவை

1) அரசுப் பள்ளியில் கல்வி

2) தமிழ் வழியில் கல்வி கற்றல்

3) ஆர்ட்ஸ் குரூப்பில் பட்டம்

4) பொருளாதார ரீதியாக வறுமைச் சூழலில் குடும்பம்

5) ஊழல் நிறைந்த இந்நாட்டில் நமக்கெங்கே கிடைக்கப் போகிறது என்ற விரக்தி. பணத்தால் மட்டுமே வேலை வாங்க முடியும் என்னும் தவறான எண்ணம்..

இந்த ஐந்து மனத் தடைகளும் தேவையற்றது. இவற்றை நினைத்து மனம் புழுங்கித் தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை. இத்தடைகளை உடைத்தெறிந்து வாழ்வில் பெரும் சாதனைகளை புரிந்த பலர் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் 'அறிவுச் சூரியன்' அம்பேத்கர்.

பள்ளிக்குக் கோணிச்சாக்கோடு சென்று தனியாக உட்கார்ந்து பாடம் படித்தவர். அன்றைய நாட்களில் அவருக்கு முன்னால் உட்கார்ந்து  அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த  எத்தனை மாணவர்கள் குறைந்த பட்சம் அந்த பள்ளிப் படிப்பை முடித்திருப்பர்?  பின்னாட்களில் அம்பேத்கர் கப்பலிலும், விமானங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பாரென்று குதிரை வண்டியிலிருந்து தள்ளி விட்ட வண்டிக்காரன் ஊகித்திருப்பானா? சாகு மகாராஜா அம்பேத்கர் உயர்கல்வி கற்பதற்கு நிதியுதவி செய்தபோது அவரால்தான் நாட்டின் நிதியையே மேலாண்மை செய்யும் இந்திய ரிசர்வ் பேங்க் உருவாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? அலுவலகத்தில் அம்பேத்கருக்குக் குடிக்கத்  தண்ணீர் தர மறுத்த அலுவலக ஊழியர்கள் எதிர்காலத்தில் அவர் சிந்தனைத் துளிகளிலிருந்து உதித்தெழும்  திட்டங்களின்  அடிப்படையில்தான் 'நவீன இந்தியாவின் கோயில்கள்' என்று அழைக்கப்பட்ட நீர்வளத்தைப் பெருக்கும் ஹிராகுட் திட்டம் மற்றும் தாமோதர் நதி பல்நோக்குத் திட்டம்  நிறைவேற்றப்படும் என்று அக்கணம் யோசித்திருப்பார்களா? நட்ட நாடு ராத்திரியில் இரவு தங்கும் விடுதியிலிருந்து விரட்டியவர்கள் அவரின் பெயரால் லட்சக்கணக்கான குடியிருப்புகளும், விடுதிகளும் கட்டப்படும் என்று கனவு கண்டிருப்பார்களா?

இப்படி வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் எவ்வளவு துன்பகரமானதாக இருந்தாலும், கொடுமையானதாக இருந்தாலும் அதற்கு இரையாகி விட்டால் யார் இந்த துன்பங்களும், கொடுமைகளும் எதிர்காலத்தில் பிறருக்கும் நிகழாவண்ணம் தடுப்பது?வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் இந்த வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே வந்திருப்பது புலப்படும். சொல்லொண்ணாக் கொடுமைகளால் கொத்துக்கொத்தாக சாகடிக்கப்பட்ட சோகங்களில் சிக்கி சோர்ந்து போகக்கூடிய சம்பவங்கள் நிறைந்திருக்கும் வாய்ப்புண்டு. அதற்குள் ஆட்பட்டுவிடக் கூடாது.

எல்லாவிடங்களிலும் இல்லாவிட்டாலும் பல இடங்களில் மக்கள் வெகுண்டெழுந்து போராடிய களங்கள் உண்டு.  வீரமும், தீரமும் நிறைந்த தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடிய காட்சிகள் உண்டு. வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடிய இடங்களில் நிரந்தரத் தீர்வைக் கண்ட நிகழ்வுகளும் உண்டு. மக்களின் திரட்சி மாற்றத்தை உருவாக்கிய இடங்களும் உண்டு. நம்முடைய வாசிப்பு அதனை நோக்கிச் செல்ல வேண்டும். தோல்விகளிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் கிடைக்கும் பாடங்களை பெற்றுக் கொண்டு, நம்முடைய தேடல் வெற்றி கண்ட போராட்ட வரலாற்றைத் தேடிச் செல்ல வேண்டும். அந்த வரலாறுதான் வன்கொடுமைகளிலிருந்தும், இழிவுகளிலிருந்தும் நம்மை மீட்டெடுக்க ஊக்கப்படுத்தும். அந்த வரலாறுதான் சமத்துவம் நிறைந்த, முழு சுதந்திரமுள்ள, மனித மாண்புகளோடு வாழ்வதற்கேற்ற சமூகத்தை உருவாக்கும் பணியை உற்சாகமாய் செய்யத் தூண்டும். அத்தகைய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், எழுச்சியையும், போர்க்குணத்தையும் அளிக்கவல்லதுதான் அம்பேத்கரின் வாழக்கை வரலாறு.

அம்பேத்கரின் இளவயது வரலாறு படிப்போருக்கு ஆத்திரமூட்டும். அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளின் கொடூரம் அத்தகையது. அம்பேத்கரின் மாணவப் பருவ வரலாறு வாசிப்போருக்கு ஆச்சரியமூட்டும். மாணவனாக அவர் தொட்ட உயரங்கள் எவரும் தொட முடியாதவை. அம்பேத்கரின் ஆரம்பகால அரசியல் ஒவ்வொருவரையும் சாதி அழிப்புப் போருக்கு எதிராக அணிதிரள ஒன்றுகூட்டும். தாம் செல்ல வேண்டிய தடத்தைத் தானே அமைத்துக் கொள்ளும் தலைமைப் பண்பு தீண்டத்தகாத  சமூகம் அதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. 1940-களில் அம்பேத்கர் நிகழ்த்திய உச்சக்கட்ட அரசியல் அறிவூட்டும். அவரின் எழுச்சி நிறைந்த பேச்சும், ஆற்றல்மிகுந்த எழுத்தும், மறுக்க முடியாத வாதத் திறமையும் அவரின் அறிவுப் பெருவெள்ளத்தின் ஒரு சிறுதுளி. அம்பேத்கரின் இறுதிக்கால அரசியல் சமூக உணர்வையூட்டும். நிலவிய சமூக அரசியல் சூழலையொட்டி அவர் எடுத்த முடிவுகளும், கையாண்ட உத்திகளும் தந்த துவக்ககால விளைவுகளை தானே கண்டு, இறுதியில் கண்டடைந்த விடுதலைப் பாதை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எதிர்காலம். அம்பேத்கரின் பெயர் ஒடுக்கப்பட்டவனிடத்தில் கலகமூட்டும். அம்பேத்கரின் முகம் ஒடுக்குபவனிடத்தில் கலக்கமூட்டும்.

திக்குத் தெரியாமல் திணறி நிற்போருக்குத் திசைகாட்டி. ஊமைகளாய் இருந்த மக்களின் குரலாய் பேசியவர். வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் உரிமைகள் இழந்த மக்களுக்காக அர்ப்பணித்தவர். தலித் சாதியில் பிறந்தவர் என்பதாலேயே அவரை நமக்கான 'முன் மாதிரி'யாகக் கொள்ள வேண்டும் என்னும் சாதிப்பற்றின் அடிப்படையிலோ, சாதிப்பெருமையின் வெளிப்பாட்டுக்காகவோ சொல்லவில்லை. அம்பேத்கரைப் படிக்காமல் விட்ட பல சமூகங்கள் தங்களின் வரலாற்றை மறந்தன. அவரின் அரசியலைக் கற்காமல் தவற விட்ட மக்கள் கிளர்ச்சி செய்ய மறந்தனர். இந்தியாவின் எவ்வளவு கடினமான சமூக, அரசியல், பொருளாதார சிக்கலாக இருந்தாலும் அவற்றைத் தீர்ப்பதற்காக அறிவார்ந்த ரீதியில் பல்வேறு மாற்று வழிகளைச் சொல்லிச் சென்றவர்.


நான் சமூகத்தின் உயர்ந்தநிலையை அடைந்திருக்கிறேன் என்று நம்பும் இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அம்பேத்கர் அதன் துவக்கப் புள்ளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்பேத்கர் கடும் உழைப்பின் சின்னம்! அன்பின் ஊற்று! அறிவின் சுரங்கம்! தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட தன்னெழுச்சி! அதற்காகத்தான் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் அம்பேத்கரின் வரலாற்றைக் கற்க வேண்டும். இழிவுகளைத் துடைத்தெறிய அம்பேத்கரின் பேச்சுக்களைப் படிக்க வேண்டும். ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற அம்பேத்கரின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும். எப்போதும் சொல்வேன்.. 'அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன்!!'

கருத்துகள் இல்லை: